டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.


தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று 2010ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


இந் நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கினர். தீர்ப்பு மொத்தம் 88 பக்கங்கள் நிறைந்தது.
தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: வெளிப்படைத் தன்மை நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்பது கிடையாது. அதற்காக, தகவல் அறியும் சட்டம் என்பதை உளவு பார்க்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

வெளிப்படைத்தன்மையைப் கையாளும்போது நீதித்துறையின் சுதந்திரத்தை மனதில் கொள்ளவேண்டும். நீதித்துறையை யாரும் இருளில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.
நாங்கள் எழுப்புகிற கேள்வியே எங்கே கோடு வரையவேண்டும் என்பது தான். வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் நீதித்துறையை அழிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.