பெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 17 பேர், ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து, பின்னர் பதவி விலகியது. பின்னர், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது.


17 எம்எல்ஏக்களின் ராஜினாமா உள்நோக்கம் கொண்டது என்று கூறி, தற்போதைய சட்டசபை பதவிக்காலம் முடியும் வரை, தேர்தலில் போட்டியிடாத வகையில் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.
அதை எதிர்த்து, 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வரும் 5ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடவும் அனுமதி வழங்கியது.


இந் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளனர். பெங்களூருவில் பாஜக கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் எடியூரப்பா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் நாளை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைகின்றனர்.


அவர்கள் மாநில தலைவர் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர். அவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றார்.