புதுடெல்லி: பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கியால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் (மெய்நிகர் டிஜிட்டல் கரன்சி) மூலமாக, பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் உலகப் பொது செலாவணியாக பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இதன் மதிப்பு சர்வதேச சந்தையால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை அங்கீகரித்தால் பொருளாதாரம் சீர்குலையும் எனவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும், சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கும் இந்த கிரிப்டோ கரன்சி பயன்படுத்தப்படும் என அஞ்சிய ரிசர்வ் வங்கி, கடந்த 2018ம் ஆண்டு இதற்கு தடை விதித்திருந்தது.

மேலும், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்களும் கிரிப்டோ கரன்சி மீது வர்த்தகம் செய்ய எந்தவித உதவியும், சேவையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இதன்மூலம், இனி இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் செய்யலாம் எனவும், வங்கிகளுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.