சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் இன்று பதவியேற்க உள்ளார். ஏ.பி சாஹிவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தஹில்ரமாணி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இடமாற்றத்தை ஏற்காமல் செப்டம்பர் 6ம் தேதி தனது பொறுப்பை கம்லேஷ் தஹில்ரமாணி ராஜினாமா செய்தார். அதனால் இடைக்கால பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி இன்று பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.