சிட்னி: ஆஸ்திரேலியா நிர்ணயித்த 375 ரன்கள் என்ற இலக்கு எட்டமுடியாதது என எந்த இந்திய பேட்ஸ்மெனும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் கேப்டன் விராத் கோலி.

இன்றைய முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 66 ரன்களில் தோற்றது இந்திய அணி.

அந்த தோல்வி குறித்து பேசியுள்ள கோலி, “பயிற்சிக்காக எங்களுக்குப் போதிய நேரம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக, சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக்கூடாது. நீண்ட நாட்களுக்குப் பின் முழு ஒருநாள் போட்டியில் ஆடியிருக்கிறோம்.

இன்றையப் போட்டியில், 25-26 ஓவர்களுக்குப் பின் அணி வீரர்களின் உடல் மொழி ஏமாற்றமளித்தது. பகுதி நேரப் பந்துவீச்சாளர்களை எப்படி சில ஓவர்கள் வீச வைக்க முடியும் என்று பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்டியா இன்னும் அதற்குத் தயாராகவில்லை என்பதால் அந்தச் சூழலைப் புரிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும்.

பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பவர்கள்தான் ஒவ்வொரு அணிக்குமே முக்கியம். அவர்கள் அணியில் ஸ்டாய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதைச் செய்து வருகின்றனர். தொடர் விக்கெட்டுகளை எடுத்து அழுத்தம் தருகின்றனர். அதைசெய்ய எங்களால் முடியாமல் போனது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை அனைவருமே தீவிரத்துடன் ஆடினோம். அதனால்தான் அனைவராலும் பவுண்டரி, சிக்ஸர் என அடிக்க முடிந்தது. எந்தக் கட்டத்திலும் எங்களால் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை. ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் அந்தத் தீவிரத்துக்கு ஒரு உதாரணம்.

முதல் 3 பேட்ஸ்மேன்கள் 130-140 ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். அது இன்றைக்கு நடக்கவில்லை. நல்ல முறையில் நேர்மறைச் சிந்தனையோடு ஆடத்தான் அனைவருமே வந்திருக்கிறோம். எனவே அதே சிந்தனையோடு அடுத்துவரும் போட்டிகளை எதிர்கொள்வோம்” என்றுள்ளார் விராத் கோலி.