சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, திமுக இலக்கிய அணி தலைவராக நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அங்கிருந்து வெளியேறிய முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் உறுப்பினரானார்.

இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி  திமுகவில் இணைந்த நிலையில், அவர் இலக்கிய அணி தலைவராக இருந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு காலமான நிலையில்,  அந்த பதவி காலியாக இருந்து வந்தது. இந்த நிலையில்,  அந்த பதவி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த அன்வர்ராஜாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.