வாஷிங்டன்
அமெரிகாவில் இன்னும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளதாக நோய்த் தடுப்பு நிபுணர் ஆண்டனி ஃபாசி எச்சரித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது, இங்கு பல்வேறு தடுப்பு மருந்துகள் மக்களுக்குத் தடையின்றி செலுத்தப்படுகின்றன. எனவே அமெரிக்கா அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக பலரும் ஊகங்களை வெளியிடுகின்றனர். இந்நிலையில் இது தவறானது என அமெரிக்க நோய் தடுப்பு நிபுணர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.
ஆண்டனி ஃபாசி, “தற்போது அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்ட போதிலும் கடினமான தருணங்களும் சில வலிகளும் இன்னும் நீங்காமல் உள்ளன. சென்ற ஆண்டு குளிர்காலத்தில் சந்தித்ததுபோல மிக மோசமான நிலையை அமெரிக்கா மீண்டும் சந்திக்காது என நம்புகிறேன். எதிர் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அவ்வளவாக இருக்காது. ஆயினும் இரு டோஸ் தடுப்பு மருந்து இன்னும் முழுமையாகச் செலுத்தப்படாத அமெரிக்க குடிமக்களால் வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் இருக்கும் நீடிக்கும்
சென்ற 7 நாட்களில் சராசரியாக வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா தடுப்பு மருந்தை முழுவதுமாக செலுத்திக்கொண்டவர்களைப் பற்றி கவலையில்லை. தடுப்பு மருந்து செலுத்தாதவர்கள் இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளனர். தடுப்பு மருந்து 100 சதவீத பலன் அளிக்கும் என்று கூற முடியாது. தற்போது பல அமெரிக்கக் குடிமக்களுக்கு அறிகுறி இல்லாத வைரஸ் தாக்கம் உடலில் இருந்து வருகிறது. இது அபாயகரமானது. இதனால் மரணங்கள் அதிகரிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.