ஐதராபாத்
நடிகையர் திலகம் படத்தில் இடம் பெற்ற பல புராதன பொருட்கள் ஃபைசல் அலி கான் என்பவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
நடிகையர் திலகம் என்னும் பட்டத்தை பெற்றவர் சாவித்திரி. ஒரு காலத்தில் தென் இந்திய திரையுலகில் மிகவும் உச்ச நடிகையாக இருந்த இவர் பிற்காலத்தில் மிகவும் துயரப்பட்டு இறந்து போனார். இவரது கதை தற்போது கீர்த்தி சுரேஷ் – துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் கதை சென்ற நூற்றாண்டு மத்தியில் பெரும்பாலும் நடப்பதாக அமைந்துள்ளது.
சாவித்திரியை ஜெமினி ஸ்டூடியோவில் பணி புரிந்த கணேசன் (பிற்காலத்தில் ஜெமினி கணேஷ்) தன்னிடம் உள்ள ஒரு புகைப்படக் கருவியில் புகைப்படம் எடுக்கும் போது முதல் முதலில் சந்திக்கிறார். அப்போது உண்டான அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்து பிறகு அவர்கள் பிரிவினால் சாவித்திரி மனம் நொந்து போகிறார். அந்தக் காட்சிக்கு தேவையான புகைப்படக் கருவி தற்பொழுது எங்கு தேடியும் கிடைக்காமல் இருந்துள்ளது. அப்போது ஐதராபாத்தை சேர்ந்த ஃபைசல் அலி கான் என்பவர் தனது கலெக்ஷனில் இருந்த புராதனப் பொருட்களைப் பற்றி சமூக வலைத் தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிந்துள்ளார்.
அதைக் கண்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் அவரை அணுக அதன் பிறகு அந்த புகைப்படக் கருவி ஜெமினி உபயோகித்ததே என தெரிய வந்துள்ளது. ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து வாங்கப்பட்ட பல பொருட்கள் அவரிடம் இருந்ததால் அவற்றை அப்படியே இந்தப் படத்தில் உபயோகப் படுத்தி உள்ளனர். ஃபைசல் இத் குறித்து, “பல வருடங்களுக்கு முன்பு நான் சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து பல புராதனப் பொருட்களை வாங்கினேன். அதில் இதுவும் ஒன்று. என்னிடம் உள்ள பொருட்களில் சுமார் 5% மட்டுமே இந்தப் படத்தில் உபயோகப்படுத்தி உள்ளனர். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் படத்தில் நானும் மறைமுகமாக பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.