தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மே 22ம் தேதியன்று 11 பேர் பலியானார்கள். நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இளைஞர் ஒருவர் பலியானார். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டமான சூழல் தொடர்கிறது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் நேற்று படுகாயம் அடைந்த செல்வசேகர் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனால், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.