நெட்டிசன்

ஜெயச்சந்திர ஹஷ்மி (Jeyachandra Hashmi)  அவர்களின் முகநூல் பதிவு

மெர்சல் பட வசனங்களை நீக்கக் கோரி பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிச்சதும், அதுக்கு சினிமா, அரசியல், சமூகம்னு அத்தனை தரப்புல இருந்து எதிர்ப்பு வந்ததயும் பாத்துட்டு இருக்கோம். கருத்துரிமைக்கு ஆதரவா இத்தனை குரல்கள் வந்ததுல நிஜமாவே மகிழ்ச்சி.
ஆனா இந்த குரல்கள் அகில இந்திய அளவுல ஒலிக்கும்போது சந்தோஷத்தோட சேர்ந்து கொஞ்சம் சந்தேகமும் வருது. நடந்த சம்பவங்கள இந்த பார்வைல கொஞ்சம் கோர்வையா சொல்றேன்.

ஊர் முழுக்க டெங்கு காய்ச்சல் பத்தி எரியுது. தினம் தினம் மரண எண்ணிக்கை ஏறிக்கிட்டே இருக்கு. மொத்த ஊடகங்களும் மக்களும் ஆளும் கட்சியை விமர்சிச்சு கிழிக்கறாங்க. டெங்கு, விமர்சனம் ரெண்டையும் கட்டுப்படுத்த முடியாம ஆளுங்கட்சி திணறுது.

இந்த சமயத்துல யதேச்சையா மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்துட்ட இருந்து ஒரு பிரச்சினை வருது. வழக்கம்போல ஒரு சினிமாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தோடு மட்டும் அந்த செய்தி கடந்து போகுது. ஆனா டெங்குதான் தலைப்புச் செய்திய புடிச்சுட்டு இருக்கு.

இந்த சமயத்துல விஜய் முதலமைச்சர மீட் பண்றாப்ல. அடுத்தநாள் விலங்குகள் நலவாரியம் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றாங்க. அதுல படத்துக்கு தடையில்லா சான்றிதழ் கிடைக்குது.

அடுத்து சென்சார். படம் ரிலீசாகறதுக்கு முந்தின நாள்தான் சென்சாருக்கு போகுது படம். சென்சார் போர்ட்லயும் பா.ஜ.க சார்பு ஆட்கள் இருக்காங்க. ஆனா படம் U/A சர்ட்டிபிக்கேட்டோட எந்த கட்டும் இல்லாம வெளிய வருது.

அடுத்தநாள் படம் வருது. வழக்கமான விஜய் அஜித் படங்களுக்கு உரிய ஓப்பனிங் டாக், விமர்சனங்கள், ரசிகர்களோட பாராட்டு, திட்டுனு மாறிமாறி வந்துட்டே இருக்கு.

அன்னைக்கே தமிழிசை சில வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாங்க. அந்த வசனங்கள நீக்கலனா வழக்கு போடுவோம்னு சொல்றாங்க. கொஞ்சம் சலசலப்பு ஏற்படுது.

அடுத்த நாளே ஹெச்.ராஜாவும் எதிர்ப்பு தெரிவிக்குறாரு. ஒரு ஸ்டேப் மேல போய் விஜய்ய ‘ஜோசப் விஜய்’னு சொல்றாரு. படத்துல கோவிலுக்கு பதிலா மருத்துவமனை கட்டலாம்னு சொல்ற விஷயத்தயும் இந்த ஜோசப் விஜய் மேட்டரயும் முடிச்சு போடறாரு. தொடர்ந்து விஜய்யும் அவர் மனைவியும் மாதா படத்துக்கு முன்னால நின்னுட்டு இருக்கற மாதிரி ஒரு ஃபோட்டோவயும் போட்றாரு.

அவ்வளவுதான். ஊடகங்கள், கட்சிகள், பொதுமக்கள், ரசிகர்கள் (எல்லா ரசிகர்கள்) னு மொத்த தமிழ்நாட்டோட மையப்புள்ளியா இந்த பிரச்சினை மாறுது. தொலைக்காட்சி விவாதங்கள், பேஸ்புக், ட்விட்டர், டீக்கடை னு அத்தனை இடங்கள்லயும் இதே பேச்சா இருக்கு. அத்தனை கட்சித் தலைவர்களும் இதப்பத்தி பேசுறாங்க.

சினிமா கலைஞர்கள் ஆதரவும் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்குது. விஜய் ரசிகர்கள் மட்டும் ஹவுஸ்ஃபுல்லாக்கும் முதல் சிலநாள் காட்சிகள, மொத்த பொதுமக்களுமே சேர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆக்குறாங்க.

இப்ப கொஞ்சகொஞ்சமா டெங்கு பிரச்சினை மக்களோட மைய நீரோட்டத்துல இருந்து விலகுது. தொலைக்காட்சிகள் டெங்கு பிரச்சினைய கைவிட்டுட்டதா சொல்லல. தொடர்ந்து விவாதங்கள் நடந்துட்டுதான் இருக்கு. ஆனா மொத்த தமிழ்நாட்டோட பேசுபொருளா இருந்த, அரசாங்கத்து மேல அத்தனை கோபத்தை உற்பத்தி பண்ணிட்டு இருந்த டெங்கு பிரச்சினை Dilute ஆகுது. அதைப் பத்தி என்னதான் பேசுனாலும் மெர்சல்தான் முன்னால நிக்குது.

எல்லாத்தவிடயும் முக்கியமா, தேசிய அளவுல இந்த பிரச்சினை ட்ரெண்ட் ஆகுது. Modi vs Mersal னு ஆங்கிலத் தொலைக்காட்சிகள்ல டிபேட் நடக்குது. இங்கதான் கொஞ்சம் சந்தேகம் வருது. ஏன்னா இந்த விஷயத்த பத்தி முக்கியமா எதிர்ப்பு தெரிவிச்சுருக்கறவங்க தமிழிசையும் ஹெச்.ராஜாவும் தான். இரண்டு பேருமே தேசிய ஊடகங்கள் பொருட்படுத்தக்கூடிய ஆட்கள் இல்லை. இதுக்கு முன்னால இவங்க சொன்ன ரொம்ப சென்சிடிவ்வான விஷயங்கள் கூட பெருசா பேசப்பட்டதில்ல.

ஆனா தமிழன் செத்தாலே திரும்பிப் பாக்காத வடஇந்திய ஊடகங்கள்ல தமிழ்ப்படம் ஒன்னு இவங்களால பேசுபொருள் ஆறதும், ஊரே சேர்ந்து எதிர்க்கும்போதும் (இதுல கல்லடி படறோம்னு நல்லா தெரிஞ்சபிறகும்) பி.ஜே.பி அத பொருட்படுத்தாம தொடர்ந்து அதேபோல செயல்படும்போதும் அந்த சந்தேகம் இன்னும் வலுக்குது.

அரசியல் ரீதியா யோசிச்சுப் பாத்தா, பா.ஜ.க அ.தி.மு.க வை பின்னிருந்து இயக்குதுன்னு சொல்லப்படறப்ப, இந்த மொத்த பிரச்சினையுமே ஏன் திட்டமிட்ட திசைதிருப்பலா இருக்கக்கூடாதுன்ற கேள்வி எழுது. முதல்வர், சென்சார் உறுப்பினர்கள், தமிழிசை, ஹெச்.ராஜா னு எல்லா திசைல இருந்தும் மத்திய அரசு இதுல சம்பந்தப்பட்டுட்டே தான் வந்துருக்கு. மத்திய அரச இந்தளவுக்கு விமர்சிக்கற படத்துக்கு தமிழக அரசு மூலமா, மத்திய சென்சார் மூலமா க்ரீன் சிக்னல் கிடைக்குதுன்றதும் சந்தேகத்துக்கான அடுத்த காரணம்.

சரி அப்பனா அ.தி.மு.க மேல இருந்த கோவத்த ஏன் பி.ஜே.பி தன் மேல தூக்கிப் போட்டுக்கனும்னு கேள்வி வரலாம். டெங்கு பிரச்சினை ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். ஒரு Governance Error இல்லனா Worst Governance. அரசாங்க செயல்பாட்ட நேரடியா குறைசொல்ற, கேள்விக்குள்ளாக்கற, எழுந்து வரமுடியாத அளவுக்கான மக்கள் கோபத்த சம்பாதித்து கொடுக்கற ஒரு விஷயம். (2011 தேர்தல்ல மின்வெட்டு தி.மு.க வுக்கு எதிரா ஆன அளவுல)

ஆனா இப்ப பி.ஜே.பி க்கு எதிரான இந்த விஷயங்கள் அவங்க அளவுல ரொம்ப சாதாரண விஷயம். In fact, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அவங்க ட்ராக் ரெக்கார்ட்ல இது ரொம்ப சப்பை மேட்டர். இன்னும் முக்கியமா, தேர்தல்ல எதிரொலிக்காத, வலுவான காரணமா எடுத்துரைக்க முடியாத ஒரு மேட்டர். 2019 ல நாடாளுமன்றத் தேர்தலோட சட்டமன்றத் தேர்தல நடத்தி, அ.தி.மு.க கூட சேர்ந்து சந்திச்சு தமிழ்நாட்டுக்குள்ள ஊடுறவ திட்டம் இருக்கற பட்சத்துல, அ.தி.மு.க க்கு எதிரா ஏற்படற இவ்ளோ பெரிய கோபத்தீய அணைக்க பா.ஜ.க சிறிய சிராய்ப்புகள தாங்கிக்குதுன்றத என்னால நம்ப முடியுது.

இந்த சம்பவங்களோட கோர்வைப்படி, எக்குத்தப்பா எதிர்ப்பலைகள் அதிகரிச்சுட்டு இருக்கும்போது யதேச்சையா ஒரு ஆபத்பாந்தவனா ‘மெர்சல்’
பிரச்சினை வந்துருக்கலாம். அத பயன்படுத்தி இந்த விஷயங்கள் அடுக்கடுக்காக நிகழ்த்தப்பட்டிருக்கலாம். பா.ஜ.க அடியைத் தாங்கிக் கொள்ளும் பட்சத்தில் அதோடு சேர்த்து தங்கள் வழக்கமான ஃபீல்ட் ப்ளானை விஜய்யை முன்வைத்து இங்கே நடைமுறைப் படுத்தி பார்க்க நினைத்திருக்கலாம். (மத/சாதி பிரிவினைகளைக் கிளறி ஓட்டுக்கள் அறுவடை செய்யும் யுக்தி). ஒரு சின்ன கல்லை விட்டெறிந்து பார்க்க ஒரு கலவரத்தை விட சிறந்த களம் ஏது?

இவை எல்லாம் ‘லாம்’ தான். ஆனால் ஒன்று மட்டும் நிஜம். டெங்கு மறக்கப்பட்டு/மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது – மெர்சலால் !! இதில் உள்ள தரவுகளோ, தகவல்களோ, இல்லை இந்த மொத்த தியரியோ கூட தவறாக இருக்கலாம். யதேச்சையாக பா.ஜ.க இதை தொடப்போய், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இத்தனை பேரையும் பா.ஜ.க விற்கெதிராக இணைத்திருந்தால் பெரும் மகிழ்ச்சியதில்.

ஆனால் இதில் ஏதேனும் ஒரு புள்ளியாவது முன்பே திட்டமிடப்பட்டு நிகழ்ந்திருந்து, நமக்கான வெற்றி என்று நாம் நினைக்கும் இந்த சம்பவங்கள் அத்தனையையும் பார்த்து யாரோ எங்கோ வெற்றிச் சிரிப்பை நமுட்டிக் கொண்டிருந்தார்களானால்….??? இத்தனை வருடங்களில் பலப்பல முறை வெற்றி பெற்றதாய் நினைத்துக் கொண்டு அதிகாரத்திடம் தோற்று வீழ்ந்திருக்கிறோம்.

இந்த முறை அவர்களை வீழ்த்துவோம். அந்த சிரிப்பை அவர்களுக்கு தர மறுப்போம். கருத்து சுதந்திரத்திற்காக தொடர்ந்து பேசுவோம். அதைவிட அதிகமாய் டெங்கு குறித்து இன்னும் அதிகமாய் பேசுவோம். விவாதிப்போம். செயல்படுவோம். எவனாவது எங்கயாச்சும் உக்காந்துட்டு Mission Accomplished னு சந்தோஷப்பட்டான்னா அவனுக்கு இந்த Mission Impossible னு உணர்த்துவோம் !!