டில்லி
ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் லஞ்ச தடுப்பு விதியை அரசு நீக்கி உள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு பாதுகாப்புத் துறையின் பேச்சு வார்த்தைகளை கிடப்பில் போட்டதாக தி இந்து பத்திரிகை ஆசிரியர் என் ராம் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த விவகாரம் குறித்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனராம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று தி இந்து ஆங்கில ஊடகம் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுவதாவது :
இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் செய்யப்பட்ட 7.87 பில்லியன் யூரோ மதிப்பிலான ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்தாவதற்கு முன்பு இந்திய அரசு பல திருத்தங்களை செய்துள்ளது. இதில் முக்கியமான ஒரு விதியான லஞ்சதடுப்பு விதி நீக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் இடைத் தரகர்களுக்கு பணம் அளிக்கவும் இந்த விவகாரங்களை கவனிக்க பிரான்ஸ் நிறுவனங்களான டசால்ட் மற்றும் எம்பிடிஎ என்னும் இரு பிரஞ்சு நிறுவனங்களுக்க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 23 அன்று இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி டசால்ட் நிறுவனம் ரஃபேல் விமானங்களையும் எம்பிடிஏ நிறுவனம் ஆயுத தளவாடங்களையும் இந்தியாவுக்கும் வழங்கும் நிறுவனங்களாகும்.
கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த ஒப்பந்த ஆவணங்களில் 8 திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் செய்ததற்கான ஆவணம் இருப்பதாக ‘தி இந்து’ பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த மாறுதல்கள் மற்றும் திருத்தங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட பின் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாறுதல்களில் முக்கியமானவை துணை அட்மிரல் அஜித் குமார் கையெழுத்திட்ட குறிப்பில் காணப்படுகிறது. அந்த குறிப்பில், “வழக்கமான பாதுகாப்பு சாதன கொள்முதலில் உள்ளபடி “முக்கிய புள்ளிகளின் தலையீடு, தரகர்கள் மற்றும் தரகு நிறுவன கமிஷன்கள், நிறுவன கணக்கு விவகாரங்களை பார்வையிடல்” போன்றவற்றை நீக்குதல்” என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகள் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதன் மூலம் இந்திய அரசு முந்தைய ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதினானது என்பது கவனிக்கத்தக்கது. அதாவது இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறி டசால்ட் மற்றும் எம்பிடிஏ நிறுவனங்களுக்கு அரசு சலுகை அளித்துள்ளது என தெரிய வருகிறது.
இது போல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகை அளித்து நேரடி கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தக் குழுவில் இருந்த எம் பி சிங், ஏ ஆர் சுலே மற்றும் ராஜிவ் வர்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு குறிப்பு அனுப்பி உள்ளனர். “இந்த ஒப்பந்தம் இரு அரசுகளுக்கு இடையில் உள்ளது என்பது தற்போது மாறி உள்ளது. அதாவது பிரான்ஸ் அரசிடம் இருந்து அனைத்து தொழில் மற்றும் நிதி குறித்த உரிமைகள் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு நிதிப் பொறுப்பை தனியார் பொறுப்பில் ஒப்படைப்பது தவறானதாகும்” என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நேரத்துக்கு விமானங்களை அளிக்காவிடில் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் விதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் நேரத்துக்கு விமானங்களை அளிக்க வேண்டும் என்பதற்காக தர வேண்டிய வங்கி உத்தரவாதம் தேவை இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிரான்ஸ் பிரதமரின் கடிதமே போதும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமரின் கடிதம் சட்டரீதியாக நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகும்.
பிரான்ஸ் பிரதமரின் இந்த உறுதிக் கடிதம் இந்திய அரசால் ஒப்பந்தம் செய்யப்படும் இறுதிக் கட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், பிரான்ஸ் நிறுவனத்தால் விமானங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு உண்டான செலவுகளை நிறுவனம் அளிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நிறுவனம் செய்ய வேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தி விரைவில் செலவழித்த தொகை கிடைக்க ஆவன செய்யும்” என காணப்படுகிறது. அதிலும் அபராதம் என்னும் சொல் இடம் பெறவில்லை.
இது குறித்து கடந்த 2016 ஆம் வருடம் ஜனவர் 14 ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய நிதித்துறை ஆலோசகர் சுதான்ஷு மொகந்தி, “ எனக்கு இந்த ரஃபேல் ஒப்பந்தத்தின் முழு கோப்புகளையும் படிக்க போதிய கால அவகாசம் தரவில்லை. நான் இதில் முக்கியமாக சொல்ல விரும்புவது வங்கி உத்திரவாதாம் இல்லாததால் இதில் பிரான்ஸ் அரசை சேர்த்திருக்க வேண்டும்.
அதாவது இந்தியா தரும் நிதியை பிரான்ஸ் அரசுக்கு அளித்து அந்நாட்டு அரசு அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்படி தவணை தொகைகளை விடுவிக்க வேண்டும். இவ்வாறு ஒப்பந்தம் இட்டிருந்தால் பிரான்ஸ் அரசுக்கும் இந்த ஒப்பந்தத்தில் பொறுப்பு இருக்கும்.” என குறிப்பிட்டுள்ளர்.
ஏற்கனவே பாதுகாப்புத் துறை நடத்திய பேச்சு வார்த்தைகளுக்கு இணையாக பிரதம்ர் அலுவலகம் நடத்திய பேச்சு வார்த்தையால் பாதுகாப்புத் துறையின் பேச்சுவார்த்தைகள் பலவீனப்பட்டு போனது என்பதை தி இந்து ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த குறிப்பும் அதே நிலையை அடைந்தது.
இந்த விவகாரத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் முக்கிய பங்கு வகித்தது புலனாகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேடி அவர் இந்த மாறுதல்களை சேர்க்க வேண்டும் என அவருடைய கையெழுத்தில் குறிப்பு அனுப்பி உள்ளார். அத்துடன் நிதிநிலை ஆலோசகருக்கு இது குறித்து படித்துப் பார்க்கவும் போதிய அவகாசம் தரப்படவில்லை.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரிக்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த 8 மாறுதல்கள் மற்றும் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிதிநிலை ஆலோசகர் அளித்த யோசனையான பிரான்ஸ் அரசு கணக்கில் பணம் போடுவதையும் அவர் ஒப்பந்தத்தில் சேர்க்காமல் இருந்துள்ளார்.
என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
Thanx : THE HINDU