டெல்லி: கவுகாத்தியில் வரும் 10ம் தேதி நடைபெறும் இந்திய இளைஞர் விளையாட்டு துவக்க விழாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. அசாம் மாநிலத்திலும் போராட்டம் கடுமையாக இருக்கிறது.

மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பலரும் போராடி வருகின்றன. அம்மாநில பாஜகவும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.

இந் நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் வரும் 10ம் தேதி நடைபெறவிருந்த இந்திய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்துள்ளார். அன்றைய தினம் அந்த விழாவை அவர் துவக்கி வைத்து உரையாற்றுவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அம்மாநிலத்தில் மோடிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எழுந்துள்ள எதிர்ப்பு அலையால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலம் இப்போது இருக்கும் நிலையில் பயணம் உசிதமானது அல்ல என்று மாநில பாஜக ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

விளையாட்டு விழாவுடன், தொடக்கி வைக்க இருந்த கண்காட்சி விழாவையும் பிரதமர் மோடி ரத்து செய்திருக்கிறார். அசாம் மாநிலத்தில் அவர் ரத்து செய்யும் 2வது நிகழ்ச்சியாகும் இது.

பிரதமர் மோடி அசாம் வரும்போது, முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்க அங்கிருந்த அமைப்புகள் முடிவு செய்து இருந்த தகவலை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் 10ம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மட்டும் செல்வார். முன்னதாக அசாம் நிகழ்ச்சிக்கு பின்னரே கொல்கத்தா பயணம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது என்று பாஜக தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.