திருவாரூர்: திருவாரூர் அருகே  அரசு  பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத கையறுந்த நிலையில், காவல்துறை உள்ளது. அதைத்தொடர்ந்து பல பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது,  கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ள விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் காரியங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் காலை உணவு சமைப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிசமையலர்கள் வந்து உள்ளனர்.

அரசு தொடக்கப்பள்ளி:அப்போது சமயலறையில் வைக்கப்பட்டு இருந்த சமையல் பாத்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்ததுடன், மேலும் சமையல் அறை முழுவதும் மளிகை பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு, அதில் மலத்தை கொட்டி வைத்துள்ளனர் .

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம் :

அதுமட்டுமின்றி அந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில்  மாணவர்கள் குடிக்க வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இருந்ததுடன், அங்கு வந்த மர்ம நபர்கள் சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு அதை அங்கேயே போட்டு வி ட்டு சென்றுள்ளனர். மேலும் அங்கிருருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தப்படுத்தி உள்ளனர். மேலும்  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுத்ததோடு, ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தினர்.

பெற்றோர்கள் கொந்தளிப்பு:

இந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் தொடக்கப்பள்ளி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ப நபரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்த சம்பவம், குறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருவகின்றனர். இதில் சாதிய பிரச்சனை ஏதுமில்லை, குடி போதை ஆசாமிகள் தான் இதனை செய்துள்ளார்கள் என்பதை காவல்துறையின் முதல் கட்ட தகவலாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வேங்கை வயல்

தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டில் மலம் கலப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 22 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறனர். ஆனால், இதுவரை யாரையும் கைது செய்ய முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் ஒரு கட்சி பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததும் அனைவரும் அறிந்ததே.

வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து , திருப்பூர், கருர்,  காஞ்சிபுரம், நாமக்கல்  என பல  மாவட்டங்களில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில், தற்போது திருவாரூர் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது.

இந்த நிலையில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் குடிக்க பயன்படுத்தபடும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம்  தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்துக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். வேங்கை வயல் சம்பவத்தில் புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கிய திமுக, உண்மை குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே அக்கறை காட்டுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர்,  நாகரீக சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத இந்த கொடூரச் செயல், தமிழகத்தில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருவதாகத் தெரிவித்துள்ள எல்.முருகன்,

வழக்கம்போல் சாக்குப்போக்கு சொல்லாமல் காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், குற்றவாளிகள் மனதில் மனிதத்தன்மையோ, காவல்துறை மீது பயமோ இல்லாததையே  திருவாரூர் சம்பவம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.