வேலூர்: நீட் தேர்வு அச்சம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டில் நீட் தற்கொலை 3 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் இந்த தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களிடையே அச்சம் உள்ளது. அதை போக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்காமல், நீட் தீர்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து, எதிர்கால இளைய சமுதாயத்தை ஏமாற்றி வருகின்றன. இதனால், நீட் தேர்வு குறித்த பயம் இளைய தலைமுறையினரிடையே அதிகரித் துவருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.
இந்தநிலையில் நடப்பாண்டு நீட் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்( 20) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
இதையடுத்து, நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி , தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோஎன்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், 3-வது ஆளாக வேலூர் மாவட்டத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் செளந்தர்யா என்ற மாணவி தோட்டபாளையம் பள்ளியில் படித்த மாணவி சவுந்தர்யா 510 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார். நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்று பயத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த சவுந்தர்யா இன்று புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் 3 நீட் தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய பா.ஜ.க. அரசு, பிடிவாதமாக இருப்பதால், அதை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் மாணாக்கர்கள் தற்கொலை நடைபெற்று வருகிறது. ஏழை மாணாக்கர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வால் சிதைக்கப்படுவதால், அவர்கள் அதை தாங்கிக்கொள்ள முடியாமல், வாழ்க்கை முடித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாதவாறு, மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு குறித்த மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டும் மாணவர்கள், பெற்றோர்கள் உடனே உதவி எண் 104 / 044-24640050 தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.