சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு  பாலியல் சம்பவம் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து,  மாணவியின் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், பேராசியர் ஒருவர், தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு மட்டுமல்லாமல், தனது தோழிகள் சிலருக்கும் அவர் பாலியல் ரீதியான குறுஞ்செய்தியை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும், இரவு நேரத்தில் தொடர்ச்சியாக செல்போனில் அழைத்து தொல்லை கொடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கமிட்டியிடமும் தான் புகார் அளித்திருப்பதாகவும், விரைந்து விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது புகார் மனுவில் மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, இந்த புகார் மீது துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, மாணவியின் செல்போனை வாங்கி, பேராசியர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் அனைத்தையும் போலீசாசர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. புகாரில் மாணவி குறிப்பிட்டுள்ளது போல், பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை பேராசிரியர் அனுப்பியது நிரூபணமாகும் பட்சத்தில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2024ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை, கல்லூரியின் அருகே ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவி ஒருவர், பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது மீண்டும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]