சென்னை; தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மக்களின் சுய உதவி, சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் ,அதை பரவலாகவும் ,மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தை கடந்த 1997ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார், மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும் ,பலப்படுத்தவும் ,மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி, பொது சொத்துக்களை உருவாக்கிப் பராமரித்து வருவது நமக்கு நாமே திட்டத்தின் உயரிய நோக்கம். இந்த தட்டம் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிங்ககு வந்ததும் மீண்டும் நமக்கு நாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த வருடம் சேலத்தில் நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்காக ரூ.100 ஒதுக்கீடு செய்ய உள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
அதைதொடர்ந்து முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது, தமிழக ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த மீதமுள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்கள் இத்திட்டத்தில் கட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.