சென்னை: வண்டலூர் மிருககாட்சி சாலையில் உள்ள வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவிய நிலையில், இன்று மேலும் ஒரு சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதை பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்து வண்டலூரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, உயிரியியல் பூங்காவும் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்து வந்த நீலா என்ற 9 வயது பெண் சிங்கத்தின் நடவடிக்கையில் வித்தியாசம் காணப்பட்டது.. இதையடுத்து அந்த சிங்கத்துக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா உறுதியான நிலையில், அந்த சிங்கம் உயிரிழந்தது.
இதையடுத்து, மற்ற வனவிலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது, மீதமிருந்த 11 சிங்கங்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 9 சிங்கங்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால்.. விலங்குகளை தனித்தனியாக இருக்கும் வகையில் பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று ஆண் சிங்கம் ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதை பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.