உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ஆந்திராவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய தமிழக இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சசிகுமார், கடந்த 2012 ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே உள்ள பாடேறு என்ற ஊருக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஏஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்றார்.

இன்று காலை அவரது இல்லத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு அவரது உதவியாளர் ஓடி வந்து பார்த்திருக்கிறார். அப்போது சசிகுமார், குண்டடிப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அவர் கையில் துப்பாக்கி இருந்திருக்கிறது.
உடனடியாக சசிகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் சசிகுமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கியை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். உயரதிகாரிகலின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக சசிகுமார் கடிதம் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரம், “அப்படி ஏதும் கடிதம் கிடைக்கவில்லை. கைதவறுதலாக துப்பாக்கி வெடித்துவிட்டது” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
கடந்த வருடம் தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலையை விசாரித்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்டதும், உயரதிகாரிகள் டார்ச்சரால் அவர் இந்த முடிவை எடுத்தார் என்று அவர் குடும்பத்தினர் புகார் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel