சென்னை: புனேயில் இருந்து சென்னைக்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தன. இவற்றை மாவட்டங்களுக்கு பிரிந்து அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கோவாக்சின்  (Coavaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield)  தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும்,  ரஷ்யாவின்  ஸ்பூட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது

அண்மையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி (PM Narendra Modi), 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்ததோடு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் எனவும் அறிவித்தார்.

தமிழ்நாட்டிலும் கொரோனா வைரசுக்கு எதிராக, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடைமுறை ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல் நாள் அன்றே, 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அதோடு, ஒவ்வொரு நாளும் 50 லட்சம், 60 லட்சம் என்ற இலக்குகளை தாண்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிக்காக, புனேயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்  மூலம் நேற்று மாலை மேலும்  3 லட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள்  சென்னையை  வந்தடைந்தன. இவற்றை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 49,845 ஆக உள்ளது.