மறுபடியும் ஒரு ,”1980 அட்டம்ப்ட்.” இம்முறை வேறு வில்லன்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு.

சுதந்திரம் வாங்கி கொடுத்ததே நாங்கள் தான் என்று சொல்லிக் கொண்டு பெரும் பலத்துடன் திகழ்ந்த தேசிய கட்சியான காங்கிரசை தமிழக ஆட்சியில் இருந்து 1967-ல் அகற்ற பேரறிஞர் அண்ணாவுக்கு பதினெட்டு ஆண்டுகள் ஆயின.
ஆனால் அண்ணா 1969ல் மறைந்த கொஞ்ச காலத்திலேயே காங்கிரசுக்குள் தேசிய அளவில் பிளவு.
பிரதமராக இருந்து கொண்டு அக்கப்போர் செய்கிறார் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து எதிர்ப்பு கோஷ்டிகளால் இந்திரா காந்தியே நீக்கப்பட்டார். ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையில் ஒரு பிரிவு, நிஜலிங்கப்பா தலைமையில் இன்னொரு பிரிவு என ரெண்டானது..
சரி தமிழ்நாட்டு மேட்டருக்கு வருவோம். எதிரணியில் இருந்த காமராஜரை வீழ்த்த 20ஆண்டு கால பரம எதிரி திமுகவுடன் கரம் குலுக்கினார் இந்திரா காந்தி.
69- ல்அண்ணா மறைந்து கலைஞர் முதலமைச்சரான இரண்டே ஆண்டுகளில் 1971-ல் முன்கூட்டியே சட்டமன்ற பொது தேர்தல் அப்போது திமுகவுக்கு தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன், பொருளாளர் எம் ஜி ஆர்..
தனக்கு துரோகம் செய்துவிட்டு கலைஞரை முதலமைச்சராக்க உழைத்தார் என எம்ஜிஆர் மீது நாவலர் நெடுஞ்செழியனுக்கு உள்ளுக்குள் கோபம் அதிகமாக இருந்த நேரமும் கூட. ஆனால் திமுக ஆட்சியைப் பிடித்து விட்டதால் படங்களில் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர், அரசியல் பேசாத படங்களாக நடித்து தொடர்ந்து, கலர் பிளாக் பஸ்டர்களை தந்து கொண்டிருந்த காலகட்டம் அது. மேக்சிமம் எல்லாவற்றிலும் ஜெயலலிதா தான் ஜோடி என்பது தனி கதை.

மறுபடியும் மேட்டருக்கு வருவோம்.
1971 சட்ட பொதுத் தேர்தலில் காமராஜரை வீழ்த்த திமுகவுக்கு இந்திராகாந்தி விட்டுக்கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். விளைவு, எம்ஜிஆரும் கலைஞரும் இணைந்திருந்த திமுக அந்த தேர்தலில் துவம்சம் செய்து முதன்முறையாக 184 இடங்களை கைப்பற்றியது. இன்று வரை திமுகவின் தனிப்பட்ட அதிகபட்ச அதிகபட்ச வெற்றி இது.
மிருக பலத்தில் இருந்து திமுக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து கலைஞரின் கை ஓங்கிய நிலையில்தான், கட்சிக்காரர்களின் திடீர் சொத்துக்கள் பற்றி எம்ஜிஆர் பிரச்சனை எழுப்ப மோதல் ஏற்பட்டது. நேரம் பார்த்து நாவலர் வெடி வைக்க, எம்ஜிஆரரை கட்சியில் இருந்து நீக்கினார் கலைஞர்.
72 -ல் தனக்கென புதிதாய் கட்சி ஆரம்பித்து 77-ல் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் 79ல் பொருளாதார இட ஒதுக்கீடு என சொதப்ப மக்களின் கோபத்திற்கு ஆளானார். கொஞ்ச காலத்தில் வந்த 1980 மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. 39 இடங்களில் இரண்டே இடம்தான் அதிமுகவுக்கு.
காங்கிரஸ் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மத்தியில் இந்திரா காந்தி பிரதமர் ஆனார். கலைஞருக்கு அளவில்லா ஆனந்தம். எம்ஜிஆரின் ஆட்சியை கலைக்க பிரதமரான இந்திரா காந்தியிடம் கலைஞர் வற்புறுத்த, அதன்படியே இந்திராவும் நடக்க, மூன்றே ஆண்டுகளில் அரசை பறி கொடுத்தார் எம்ஜிஆர்.
தமிழ்நாட்டில் இந்த சந்தர்ப்பத்தை விடவே கூடாது என்று இந்திராகாந்தி ஒரு திடமான முடிவில் இருந்தார். ஆட்சி தலைப்புக்கு கைமாறாக சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கலைஞரிடம் நிபந்தனை விதித்தார்.
1973 திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல் முதல் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி பெற்று திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்த எம்ஜிஆரை மீண்டும் தலை தூக்கவே விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்திராவின் நிபந்தனைக்கு பணிந்தார் கலைஞர்.
திமுகவுக்கு 112 இடங்களை வைத்துக் கொண்டு அதைவிட இரண்டு தொகுதிகளை அதிகமாக என காங்கிரசுக்கு 114 இடங்களை வாரிக் கொடுத்தார் கலைஞர்.
அந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி மூலம் மீண்டும் காங்கிரஸ் வரக்கூடிய நிலைமை..

இங்குதான் பெரிய டுவிஸ்ட்.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் எந்த அதிமுகவுக்கு படுதோல்வியை வழங்கினார்களோ அதே அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள் மக்கள்.
67-ல் அண்ணா அகற்றிய காங்கிரசுக்கு, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டில் பக்கம் எட்டிப் பார்க்க முடியாத அளவிற்கு சாவு மணி அடித்தார் எம்ஜிஆர்..
“காங்கிரஸ் எதிர் திமுக” என்று இருந்ததை, அதிமுகவை துவக்கி “திமுக எதிர் அதிமுக” என மாற்றிக் காட்டினார் எம் ஜி ஆர்.
இனி தமிழ்நாட்டில் ஒரு திராவிட கட்சிக்கு மாற்று, ஒரு திராவிட கட்சியே என்று எம்ஜிஆர் ஏற்படுத்திய நிலைப்பாடுதான் 53 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வருகிறது..
ஒரே வித்தியாசம். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று அன்று என்னென்னமோ பகிரப் பிரயத்தனம் செய்தது. இன்று எப்படியாவது முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என பாஜக செய்கிறது.
ஒரு திராவிட கட்சி காலியாகி, மீண்டும் “தேசிய கட்சி எதிர் திராவிட கட்சி” என்ற நிலை தமிழக நாட்டில் உருவானால் எங்கே போய் முடியும் என்பதுதான் எதிர்கால கேள்வி.