சென்னை: மணலி குடோனில் இருந்து மேலும் 12 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.
சென்னை மணலி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் 37 கண்டெய்னர்களில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்த 740டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற வேண்டும் என்று சுங்கத் துறைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இதையொட்டி, அமோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஐதராபாத் நிறுவனத்துக்கு கண்டெய்னர் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கனவே கடந்த ஞாயிறன்று 10 கண்டெய்னர்களில் சுமார் 181 டன் வேதிப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில், தற்போது, 2வது கட்டமாக சுமார் 216 டன் அளவிலான அமோனியம் நைட்ரேட் 12 கண்டெய்னர்களில் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு இதற்கான பணிகள் நடைபெற்றன. இதுவரை மணலி குடோனில் இருந்து 22 கண்டெய்னர்கள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. இன்னும் 15 கண்டெய்னர்கள் சென்னை மணலி சுங்கத்துறை கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையும் ஓரிரு நாளில் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த வாரம், லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட் துறைமுகம் அருகே உள்ள சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அந்த பகுதியே உடைந்து நொறுங்கி சீர்குலைந்தது. இந்த வெடிவிபத்து உலக நாடுகளை எச்சரிக்கை செய்ய வைத்தது.
இதையடுத்து, சென்னை மணலி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை 3 நாட்களுக்குள் அகற்ற தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.