சென்னை: கொரோனா வைரசால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்து உள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட வில்லை. இந்தியாவில் கொரானோவால் இதுவரை 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
மேலும் வரும் 27ம் தேதி தொடங்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தற்போது நடைபெற்று வரும் 11 & 12ம் வகுப்பு தேர்வுகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.