மோகன் பாகவத்

விருந்தாவன், உ.பி.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வருடாந்திர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தனது ஆதரவாளரான பா ஜ க பிரதிநிதிகளுடன் இன்று துவங்கியது.

இன்று துவங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் வருடாந்திர ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற உள்ளது.  இந்தக் குழுவில் உள்ள 40 உறுப்பினர்களுடன் பா ஜ க தலைவர் அமித்ஷா மற்றும் சில பிரதிநிதிகள் கலந்து உரையாற்ற உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியுட்டுள்ள அறிக்கை குறித்து விவாதம் நடக்கும் என தெரிகிறது.  ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஓ பி மித்தல் ”நாங்கள் பணமதிப்புக் குறைப்புக்கு எதிரானவர்கள் அல்ல.  ஆனால் பெரும்பாலான குறும் தொழில் முனைவோர் தங்கள் ஊழியர்களுக்கு வாரச் சம்பளம் அளிக்கின்றனர்.  அந்த ஊதியம் ரொக்கமாக மட்டுமே வழங்க முடியும். எனவே குறும் தொழில் முனைவோருக்கு பணம் எடுக்க வரையறுக்கப்பட்ட தொகையை அதிகப் படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

எனவே மித்தல் இந்தக் கூட்டத்தில் பணமதிப்பு குறைப்பால் ஊழியர்கள் அடைந்த துயரத்தைப் பற்றிக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆர் எஸ் எஸ் அமைப்பிலுள்ள மற்ற தொழிலாளர் அமைப்புகளும் இது குறித்து விவாதிக்கும் என சொல்லப்படுகிறது.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.