சென்னை: பிரதமர் மோடி இந்த மாதம் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார். பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதுடன், அடுத்த நாள் குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து நெல்லையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண், என் மக்கள் யாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே பாஜகவை வளர்க்கவும், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடியை வெற்றி பெற வைத்து ஆட்சி அமைக்கவும், ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அவரது யாத்திரை நடைபெறுகிறது. இதுவரை 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடைபெற்றுள்ள இந்த யாத்திரை இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வருகிறது.
முன்னதாக, கடந்த 2023ம் ஆண்ஒடு ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். நடைபயணத்தின் போது மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடியின் சாதனைகளையும் பிரச்சாரம் செய்து வந்தார். தமிழகத்தில் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வருகிற 27ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் நடைப்பயணத்தின் நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமரின் வருகை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் 27ந்தேதி பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலை யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி 28ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். தொடர்ந்து, ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்தே செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் காரணமாக மற்றொரு ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர்குலசேகர பட்டிணம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வருகை தருகிறார். பாளையங்கோட்டை . ஜான்ஸ் கல்லுாரி ஹெலிபேடில் இறங்குகிறார். கார் மூலம் திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகம் எதிரே உள்ள திடலில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
திருநெல்வேலியில் பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான இடத்தை நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.