சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்,  மக்கள் முடிவை பாஜக ஏற்கிறது என்று கூறியுள்ள மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது  என்று கூறினார்.

அதேவேளையில் அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்ற கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை 12  சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது 10-வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 71ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.  அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. அதிமுக வேட்பாளர் 35000  வாக்குகளை பெற்று பின்னடைவில் உள்ளார்.

தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை இன்று செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.  ஆனால்இ, திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கான தேர்தல்.  அந்த தேர்தலில், ஆளும் கட்சி எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது. ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது என தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி சரித்திர வெற்றி. நாகாலாந்தில் பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த மாநிலம். பாஜக அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக பாஜக கூட்டணிக்கு அங்கும் வெற்றி கிடைத்துள்ளது.

மேகாலயாவைப் பொறுத்தவரை, பாஜக தனித்துப் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜகவின் கூட்டணி இல்லாமல் அங்கு ஆட்சியமைக்க முடியாது என்ற கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த வெற்றிக்கு ஒரே காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

1947-ம் ஆண்டு தொடங்கி 2014 வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு எத்தனைமுறை சென்றார்களோ, பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 52 முறை பயணித்துள்ளார். மத்திய அரசு செய்து கொடுத்துள்ள நலத்திட்ட உதவிகளின் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் பாஜக அல்லது பாஜக சார்ந்திருக்கிற கட்சிகளின் ஆட்சியென்று வந்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்தபிறகு, மக்கள் கொடுத்திருக்கக்கூடிய செய்தியை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அரசியல் ஜனநாயகத்தில் முக்கியமானது. அப்படித்தான் பாஜக எல்லா தேர்தல்களையும் பார்க்கிறது. ஏனென்றால் மக்கள் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நிறைய விஷயங்களை முன்வைத்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் சில விஷயங்களை முன் வைத்திருக்கிறோம். அங்கு எப்படி பணம் விளையாடியது என்பதையெல்லாம் பார்த்தோம். எனவே, மக்களின் முடிவை பாஜக ஏற்றுக் கொள்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 13 மாதங்கள் இருக்கிறது. இடைத்தேர்தல் ஆரம்பித்தபோது இந்த வார்த்தையை சொன்னேன், 2024 தேர்தல் எங்களுக்கான தேர்தல். பாஜகவின் தலைவர்கள், தொண்டர்கள் பதில் சொல்வதற்கு காத்திருக்கிறோம். இந்த இடைத்தேர்தல் என்பது பாஜகவுக்கான இடைத்தேர்தல் இல்லை. அதனால், நாங்கள் போட்டியிடவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தோம். கூட்டணி தர்மத்தின்படி எங்கள் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருமே வேலை செய்து கொடுத்திருக்கிறோம்.

மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான சாக்குப் போக்குகளை திருமாவளவன் தேடி வருகிறார். வெளியேறுவது என்றால் வெளியேறிவிட வேண்டும். சாக்கு போக்குகளை கூறக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  “ஈரோடு தொகுதி மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தந்ததோடு அஇஅதிமுக – பாஜக சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.