சென்னை: உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை.  அவருக்கு மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் அண்ணாமலை செல்லும் இடங்களில் மறியல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுக பாஜக இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், அதிமுக பாஜக இடையேயான வார்த்தை போர் மேலும் வெடித்தது.

சமீபத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மைக்கைப் பார்த்தால் அண்ணாமலைக்கு ஒரு வியாதி போல.. மைக்கைப் பார்த்துவிட்டாலே பேட்டி கொடுக்கத் தொடங்கிவிடுவார். அப்படி ஒரு வியாதி அவருக்கு. எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால் உழைக்காமலே பதவிக்கு வந்தவர் ஒருவர்தான். அவர் யாரென்றால்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான்.

அவர் கட்சிக்காக என்ன உழைப்பைக் கொடுத்தார். பாஜகவில் எத்தனை முன்னணி தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு யாருக்குமே இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏதோ ஒரு வழியில் தலைவர் பதவியைப் பெற்றார்.  அதை வைத்துக்கொண்டு இன்று தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்.

இந்த பேச்சுக்கு பதிலடி கொடுப்பதாக எண்ணிய அண்ணாமலை, கடுமையான வார்த்தைகளால் தனது எதிர்க்கருத்தைப் பதிவு செய்து, அந்த பேச்சு இன்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

 அண்ணாமலை பேசுகையில், கூவத்தூரில் நடந்தது அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நிகழ்வா? அங்கு நடந்தது ஒரு அலங்கோலம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நடத்திய ஒரு கட்சி, திமுகவுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்த கட்சி, கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள். டெண்டர் போல தலைவரை தேர்வு செய்தீர்கள். எந்த எம்எல்ஏவுக்கு மாதம் மாதம் எவ்வளவு கொடுப்பது என்ற ஏலத்தில் தான் தலைவர் தேர்வு செய்யப்பட்டார் என்று அண்ணாமலையும் பதிலுக்கு பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  பச்சை மையில் பத்து ஆண்டுகள் கையெழுத்துப் போட்ட, விவசாயியின் மகனை இந்த அண்ணாமலையைப் பற்றி பேச பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அண்ணாமலை விமரிசித்திருந்தார்.

இதற்கு, மீண்டும் அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திதோடு மோதல் போக்கையும் அதிகரிக்க செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க. பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அண்ணாமலை பேசியது என்ன?

தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

இக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன. காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியை கொடுத்தனர். தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள்.

அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு போன்றோர் இருக்கும்போது, அரியணை உதயநிதிக்கு சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார். திமுகவினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை வேரறுப்போம் எனக் கூறியவர்கள், பழநிக்கு பால்காவடி எடுப்பதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை சீரழித்தவர்களை முருகன் தண்டிப்பார்.

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும். நமக்கு திமுக, அதிமுக இருவரும் எதிரிகள்தான். பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் ஆகியிருக்கிறார். எனவே பழனிசாமி என்னை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை.

கூட்டணிக் கட்சி தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும். உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களில் பாஜக தனித்து நிற்கும். வரும் செப்.1-ம் தேதி முதல் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் 10 லட்சம் பேரையாவது கட்சியில் சேர்க்க வேண்டும். 2 மாதத்தில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்ப்பது என்ற இலக்கை எட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: ஆன்மிகம் பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று முருகன் மாநாடு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று சொன்னதற்காக எனக்கான பாதுகாப்பை ஸ்டாலின் நீக்கி உள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவைப் போல இவரும் வீட்டில் அமரப்போகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெறும். தமிழக சட்ட பேரவையில் பிரதமர் மோடி செங்கோல் நிறுவுவார் என்றார்.