சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் பெயரும், கமாராஜரின் பெயரும் நீக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா – காமராசர் பெயர் நீக்கம் கண்டனத்திற்குரியது. சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது (1989)- முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனையத்திற்குக் காமராசர் பெயரும் சூட்டப்பட்டன.
இப்பொழுது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இருபெரும் தலைவர்களின் பெயர்களும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வினைப் புண்படுத்தும் வேலையில் மத்திய பா.ஜ.க. ஆட்சி ஈடுபட்டு வருகிறது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது – உடனடியாக ஏற்கெனவே இருந்து வந்த அரும்பெரும் தலைவர்கள் அண்ணா, காமராசர் பெயர்கள் இடம் பெறவேண்டும். இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை மதிக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.