சென்னை:  கிண்டியில்  உள்ள அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கான கால அவகாசம் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக் காலம், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, புதிய துணைவேந்தரைத் தோ்ந்தெடுப்பதற்காகத் தேடுதல் குழு ளுநர் பன்வாரிலால் புரோகித்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய  துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார்.  இவருக்கும், தமிழகஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. அவர்மீது விசாரணையம் அமைக்கப்பட்டு, விசாரணையும் நடைபெற்றது. அவர் கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார்.

இதையடுடா புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான பணி தொடங்கியது. இதற்காக மூன்று பேர் கொண்ட குழு   ஆளுநர் சார்பில் அமைக்கப்பட்டது. அதன்படி,  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், தமிழக அரசின் சார்பில், தமிழக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர், புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,   தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு ஜூன் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தரவிறக்கம் செய்து விண்ணப்பித்து nodalofficer2021@annauniv.edu என்ற இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதிலிருந்து நேர்முகத் தேர்வின் மூலம் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களிலிருந்து தகுதியான ஒருவரைத் தமிழக ஆளுநர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.