சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து,  தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி  வரும் 6-ந் தேதி தே.மு.தி.க. சார்பில்  மாநிலம் முழுவதும்  ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2024, டிசம்பர் 23ந்தேதி அன்று, அங்கு இரண்டாமாண்டு பொறியியல் படித்து வரும்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்  ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும், இதை காட்டி மிரட்டி, மற்றொருவருக்கும் இணங்கும்படி, போனில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில், மாணவி கொடுத்த புகாரின் எஃப்ஐஆர் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகர காவல்ஆணையரின் திடீர் பேட்டி மேலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து நீதிமன்றமும் கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா போராட்டத்தை அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் இந்த  ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.