சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே திமுக பிரமுகரால் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து, இன்று காலைஎ அதிமுக, மற்றும் பாஜக போராட்டம் அறிவித்து உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2ம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், என்ன நடந்தது என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், பல்கலைக்கழகம் விளக்கம் அளித்திருப்பதாக தெரிவித்ததால், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மாணவர் அமைப்பினர் அறிவித்தனர்.
அதிமுக அறிவித்துள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து தடுக்க தவறி வருகிறது. இதனை கண்டித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க தென் சென்னை (தெற்கு மேற்கு) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விருகை என்.ரவி தலைமையில் அண்ணா பல்கலைக்கழக வாயில் முன்பு 26-ந் தேதி (இன்று) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கடப்பட்து உள்ளது.
முன்னதாக இச்சம்பவத்தைக் கண்டித்து ”எக்ஸ்” தளத்தில் பதிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்படியொரு கொடூரம் நிகழ்ந்தது வெட்கக்கேடானது என சாடியிருந்தார். சட்டம் ஒழுங்கை திமுக அரசு பின்னோக்கி தள்ளி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதுபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய், மாணவிக்கு நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. மாணவி கூறிய புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நண்பருடன் தனியாக இருந்ததை வீடியோவாக எடுத்த ஞானசேகரன், அதனை டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசி தர வைப்பேன் எனக் கூறி மிரட்டினார் என்று அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார். மேலும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் மாணவியின் தந்தைக்கு வீடியோவை அனுப்பி விடுவேன் என்றும் இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கூறி ஞானசேகரன் மாணவியை மிரட்டியதாக எஃப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது.
ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்ட பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் எஃப்ஐஆரில் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கைதானவர் தி.மு.க., பிரமுகர் என்று கூறிய அண்ணாமலை, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க., பிரமுகர் என தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர் மீதான பழைய வழக்குகள் அழிக்கப்பட்டுள்ளன; குற்ற விபரங்களும் பராமரிக்கப்படவில்லை அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகளின் அழுத்தத்தால் கைதானவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்படவில்லை போலீசார் விசாரிக்காதது அந்த நபரை மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட இடமளித்துள்ளது; இதையெல்லாம் மக்கள் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும்
– தி.மு.க., அமைச்சர்களுடன் ஞானசேகரன் இருக்கும் போட்டோக்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கைதானவர் திமுக பிரமுகர் அல்ல – அமைச்சர் கோவி. செழியன் மறுப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலை ஆதாரங்களை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.