2001 – 2002 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்து வேறு பல்கலைக்கழக தேர்வு எழுதிய மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 2001 – 2002ம் ஆண்டில் பொறியியல் சேர்ந்த மாணவர்கள் அந்த ஆண்டு தங்கள் முதல் மற்றும் இரண்டாம் செமெஸ்டர் தேர்வுகளை சென்னை பல்கலைக்கழகம், பெரியார், பாரதிதாசன், பாரதியார், மதுரை காமராஜ் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் ஆகிய பல்கலைக்கழங்கள் நடத்திய தேர்வை எழுதி அரியர் வைத்திருப்பவர்கள்.

பின்னர், 2002 முதல் தங்கள் 3 மற்றும் அதற்கடுத்த செமெஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் எழுதிய மாணவர்கள் தங்கள் முதல் மற்றும் இரண்டாவது செமெஸ்டர் அரியர் தேர்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொறியியல் பட்டம் பெற முடியாமல் இருந்த பலருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 நவம்பர் / டிசம்பர் மற்றும் 2025 ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெற உள்ள செமெஸ்டர் தேர்வுகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இந்த சிறப்புத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டப்படிப்பை முடிக்க முடியாமல் இருந்த மாணவர்களுக்கு இந்த கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.