சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’ கட்டடம் உள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக புரொஜக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்த அந்த வளாகத்தை மருத்துவமனையாக அரசு அறிவித்தது. அதனையடுத்து சிவி ராமன் கட்டடம் தனிமைப்படுத்தும் வார்டாக தயார் செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி வசம் அந்த கட்டம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கை குறைந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தனிமைப்படுத்தும் மையம் மூடப்பட்டு மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17ம் தேதியன்று 5 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் முத்துக்குமார் என்பவர் சிவி ராமன் வளாகத்தை சுத்தம் செய்வதற்காக சென்றார். அங்கு சென்று பார்த்த போது முன்பக்க வாசல் கதவு பூட்டை உடைக்காமல் பேட்லாக் உடைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள அறை எண் 101ல் பேட்லாக் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 41 புரொஜக்டர்கள் திருடு போயிருந்தன.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் வளாக அதிகாரியுமான குணசேகரன் கிண்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புராஜக்டர் கருவிகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருடர்களைப் பிடிக்க அடையாறு துணைக் கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து நடந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.