சென்னை: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில், பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் இறுதியில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
இந் நிலையில், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக மறுதேர்வு அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை வரை ஒரு மணி நேர தேர்வாக இந்த தேர்வு நடத்தப்படும்.
மேலும் இது பற்றிய முழு விவரங்களை https://www.annauniv.edu/ என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.