சென்னை: தமிழகத்திலுள்ள 92 பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில், 25% முதல் 50% வரையிலான மாணவர் சேர்க்கையை ரத்துசெய்ய முடிவுசெய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
மோசமான உள்கட்டமைப்பு மற்றும் போதுமான பேராசிரியர்கள் இல்லாமை போன்றவையே இதற்கான காரணங்கள்.
தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 537 தனியார் பொறியியல் கல்லூரிகளில், பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில், ஐஐடி – சென்னை, ஐஐஎஸ்சி – பெங்களூரு மற்றும் என்ஐடி – திருச்சி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 170 பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த ஆய்வில், மொத்தம் 250 பொறியியல், எம்பிஏ மற்றும் எம்சிஏ கல்லூரிகளில் வசதி குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவர்கள் தந்த விளக்க அறிக்கையின் அடிப்படையில், மொத்தம் 92 பொறியியல், கட்டிடக்கலை, எம்பிஏ மற்றும் எம்சிஏ கல்லூரிகளில் உள்ள 300 துறைகளில், மாணவர் சேர்க்கையை 25% முதல் 50% குறைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு சுவாரஸ்ய மோசடி என்னவென்றால், ஒரே நபர், மொத்தம் 4 வெவ்வேறான கல்லூரிகளில் பேராசிரியராக அடையாளம் காட்டப்பட்டது! எனவே, பல கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்களே கிடையாது என்ற நிலை வெட்டவெளிச்சமாகியுள்ளது.