சென்னை,

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதாலேயே சென்னையில் உள்ள அண்ணா நுாலகத்தை புறக்கணித்து வந்த அ.தி.மு.க. அரசு, 7 ஆண்டுகளுக்கு பின், அந்த நுாலகத்துக்கு நிதி ஒதுக்கி, அங்கீகாரம் அளித்துள்ளது.

சென்னை, கோட்டூர்புரத்தில், 3.48 லட்சம் சதுர அடி பரப்பில், 178 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டது.  2010ல், தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது.

அடுத்து வந்த ஜெயலலிதா தலமையிலான அ.தி.மு.க. அரசு, இந்த நுாலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தது.

இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் நீதிமன்றம் சென்றார்கள். ஜெயலலிதா அரசின் முடிவுக்கு நீதி மன்றம் தடை விதித்தது.

ஆகவே நுாலகம் தொடர்ந்து செயல்பட்டது.  ஆனாலும், அரசு இந்த நூலகத்தை புறக்கணித்தே வந்தது. சரியாக பராமரிக்கப்படவில்லை. புதிதாக புத்தகங்கள் வாங்கப்படவில்லை.

இது குறித்து, ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்தன. ஆனாலும் அதிமுக அரசின் புறக்கணிப்பு தொடர்ந்தது.

இந்த நிலையில்  நூலகத்தின் அவல நிலை குறித்து . சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கலானது. நூலகத்தை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடவே,  பராமரிப்பு பணிகள் துவங்கின.

ஆனாலும், தமிழக அரசின் கொள்கை விளக்க புத்தகத்திலும், பட்ஜெட்டிலும், அண்ணா நுாலகத்தின்  பெயர் எந்த ஒரு இடத்திலும் இடம் பெற வில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம், சட்ட சபையில் வெளியான அரசின் கொள்கை விளக்க புத்தகத்தில், அண்ணா நுாலகம் குறித்த தகவல்கள், வண்ண படங்களுடன் இடம் பெற்று இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு, கல்வி அமைச்சரின், 37 அறிவிப்புகளில், அண்ணா நுாலகத்திற்கு புத்தகங்கள் வாங்க,ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆரம்பித்த அண்ணா நூலக புறக்கணிப்பு ஏழு ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்துள்ளது.

இதை புத்தக ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.