டில்லி:

’’போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு டில்லிக்கு வரும் ரெயில்களை ரத்து செய்து சூழ்ச்சியில் ஈடுபடுகிறது’’ என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

விவசாய பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும். சாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்ப டுத்த வேண்டும். லோக்பால் சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ராம்லீலா மைதானத்தில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இதற்காக டில்லி மாநில அரசிடம் அவர் அனுமதி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘போராட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வருவதை தடுக்கும் வகையில் டில்லி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களை வன்முறையில் தள்ள முயற்சி செய்கிறீர்கள் . பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று பல கடிதங்களில் குறிப்பிட்டிரு ந்தேன். உங்களது பாதுகாப்பு என்னை காப்பாற்றாது. இது மத்திய அரசு சூழ்ச்சி அணுகுமுறையை கையாளக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிரா வேளாண் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் அன்னா ஹசாரேவை சந்தித்து போராட்ட முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாடு முழுவதும் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஹசாரே ஒருங்கிணைத்திருந்தார். லோக்பால் அமைக்க மோடி அரசு முன்வரும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]