சென்னை: எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதை தடுக்க அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, எருமை மாட்டிடம் மனு அளிக்கப்போவதாக விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதையடுத்து, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அனுமதி வழங்கக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், திருவெண்ணைநல்லூர் பகுதி பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி காவல்துறைக்கு விண்ணப்பம் அளித்தேன், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, அந்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது . எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது மிருக வதை தடைச் சட்டத்தை மீறிய செயல் என்பதால்என்பதால், எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதை அடுத்து, போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.