மும்பை:

ரூ.450 கோடி தந்து உதவி, எரிக்ஸன் வழக்கிலிருந்து சிறை செல்லாமல் காப்பாற்றிய தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், அண்ணி நீட்டா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.


கடந்த 2014-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்வீடனின் எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்து கொண்டன.

எரிக்ஸனுக்கு ரூ. 550 கோடியை ரிலையன்ஸ் தர வேண்டியிருந்தது. இந்த தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை எரிக்ஸன் நிறுவனம் நாடியது.

தொகையை, வட்டியும் முதலுமாக அனில் அம்பானி வழங்காவிட்டால், 3 மாதம் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 550 கோடி மற்றும் வட்டித் தொகை ரூ. 21 கோடி சேர்த்து மொத்தம் ரூ. 571 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியது.
இதனை எரிக்ஸன் நிறுவனமும் உறுதி செய்தது.

இதில், ரூ.450 கோடியை முகேஷ் அம்பானியும், நீட்டா அம்பானியும் கொடுத்து உதவியுள்ளனர்.
இதற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அனில் அம்பானி பதிவிட்டிருக்கிறார்.

“என் இதயப்பூர்வ நன்றியை மரியாதைக்குரிய அண்ணன் முகேஷ் அம்பானிக்கும்,  நீட்டா அம்பானிக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் எனக்கு நீங்கள் இருவரும் ஆதரவாக இருந்துள்ளீர்கள். குடும்ப உறவின் பலத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எனக்கு உணர்த்தியுள்ளீர்கள்.நானும் என் குடும்பத்தாரும் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரிலைன்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிந்தபோது, தனது அண்ணன் முகேஷ் அம்பானி மற்றும் அண்ணி நீட்டா அம்பானியுடன் அனில் அம்பானி தொழில் ரீதியாக மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.