ஆர்காம் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி தீர்ப்பாயத்தில் அனில் அம்பானி மனு

புதுடெல்லி:

கடும் கடன் சுமை காரணமாக, தங்களது ஆர்காம் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் அனில் அம்பானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்திய நிறுவனங்களில் பங்குச் சந்தை மூலமாக நிதி திரட்டுவதில் பல சாதனைகளைப் படைத்தவர் திருபாய் அம்பானி. 2002-ம் ஆண்டு இவர் இறக்கும் போது 2 மில்லியன் பங்குதார்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் முதன் முதலாகப் பங்கு சந்தையில் கால் பதித்த போது, பல முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டனர். அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் சிறிய முதலீடு செய்தவர்கள் எல்லாம் இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

ஆனால் இன்றைய சூழல் தலைகீழாகிவிட்டது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் சுமையால் திவால் ஆகியுள்ளது. வங்கிகளில் பெற்ற 7 மில்லியன் டாலர் கடனும், மற்றவர்களிடம் பெற்ற கடனும் இன்று அனில் அம்பானியை பாதாளத்துக்கு தள்ளிவிட்டுள்ளது.

திருபாய் அம்பானி இறந்த பிறகு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையில் சொத்துப் பிரச்சினை எழுந்தது.

பின்னர் 2006-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி வசம் சென்றது.

இந்நிலையில், ஆர்காம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது டெலிகாம் சாதனங்கள் உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனம் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்திடம், தங்களுக்கு அளிக்க வேண்டிய 1,150 கோடி ரூபாயை அனில் அம்பானியிடமிருந்து பெற்றுத் தருமாறு மூன்று மனுக்கள் தாக்கல் செய்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினை முகேஷ் அம்பானி துவங்கிய பிறகு ஆர்காம் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆர்காம் நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம் அனில் மற்றும் முகேஷ் இருவரும் சொத்துகளைப் பிரித்துக்கொண்டதே ஆகும்.

2007-ம் ஆண்டு பில்லியனர்கள் பட்டியலில் அனில் அம்பானிக்கு 45 பில்லியன் டாலர் சொத்துகள் இருந்தன. அதில் 66 சதவீதம் ஆர்காம் நிறுவனப் பங்காக இருந்தது. ஆனால் தற்போது இவர் வசம் 3.15 பில்லியன் டாலர் சொத்துகள் மட்டுமே உள்ளன.

ஆர்காம் நிறுவனம் தனது சொத்துகளை விற்றுக் கடனை அடைத்துவிடலாம் என்று பல வகையில் முயன்றும் அதில் உள்ள சட்ட சிக்கல் எழுந்ததால், நெருக்கடி ஏற்பட்டது.

அண்மையில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தை அதான் நிறுவனத்துக்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் லிமிட்டெட் (ஆர்காம்) நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடன் கொடுக்க வேண்டிய நிறுவனங்களுடன் கடந்த 14 மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டபின், இந்த முடிவுக்கு அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் வந்துள்ளது.

அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் லிமிடெட்டின் தொலைத் தொடர்பு வர்த்தகத்தை முடக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Anil ambani loss, அனில் அம்பானி திவால்
-=-