மும்பை
அனில் அம்பானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த 5 நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி இன்சால்வென்சி நோட்டிஸ் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானதை ஒட்டி அவருடைய பங்குகள் விலை கிடுகிடுவென குறைந்தன. இந்தியாவின் நம்பர் 1 நிறுவனம் என சொல்லப்படும் நிறுவனத்தின் பங்குகள் இவ்வாறு சரிவதால் பொருளாதாரத்திலும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனங்களின் தலைவர் அனில் திருபாய் அம்பானி, “எங்கள் நிறுவனப் பங்குகளை சில வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் திடீரென பொதுப் பங்கு சந்தையில் விற்பனை செய்துள்ளன. குறிப்பாக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் மற்றும் எடெல்வைஸ் நிதி நிறுவனங்கள் இவ்வாறு விற்பனை செய்துள்ளன. அதனால் விலை கடுமையாக சரிந்துள்ளன.
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் நேவல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் ஏஎம்சி உள்ளிட்ட அனைத்து குழும நிறுவனங்களின் ரூ. 400 கோடி மதிப்புல்ள பங்குகள் பிப்ரவரி 4 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை எல் அண்ட் டி ஃபைனான்ஸ் மற்றும் எடெல்வைஸ் நிதி நிறுவனங்கள் மறுத்துள்ளன. சட்ட விதிகளுக்குட்பட்டு தங்களிடம் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்துள்ளதாகவும் இதில் தவறு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளன.
இந்த நான்கு நாட்களில் அனில் அம்பானியின் பங்குகள் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு சரிந்துள்ளன. இந்த நிறுவனங்களில் முதலீடு சேய்துள 72 லட்சம் பங்குதாரர்கள் கடுமிழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் கலக்கத்துடன் உள்ளனர்.