ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு.

தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம், எந்த மன்னரை காப்பாற்ற யாருக்காக எந்த சாணக்யனால் நடத்தப்பட்டது என்று ஒரு வாரம் ஆன நிலையிலும் தெரியாமல் உள்ளது.

இந்நிலையில், அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் குழும மூத்த அதிகாரியான டோனி ஜேசுதாசன் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு அதிகாரி வெங்கட ராவ் போசினா ஆகியோரது எண்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்கியதில் நடந்த முறைகேடு குறித்த விவகாரம் வெளியாகி, அந்த விவகாரத்துக்கு நீதிமன்றத்தில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முற்றுப்புள்ளி வைத்தார்.

2016 ம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஊழல் விவகாரம் 2018 ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் நீர்த்துப்போனதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான காலகட்டத்தில் அனில் அம்பானி, டோனி ஜேசுதாசன் மற்றும் அவரது மனைவி. ரபேல் ஊழல் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட அதன் முன்னாள் இணை ஆசிரியர் சுஷாந்த் சிங் மற்றும் வெங்கட ராவ் போசினா உள்ளிட்டோரின் எண்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், அதே ஆண்டில் இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோனின் குழுவில் இடம் பெற்ற பிரான்சின் எரிசக்தி நிறுவனமான இ.டி.எப். நிறுவனத்தின் தலைவர் ஹர்மஞ்சித் நாகியின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.

ரபேல் விமான பேர ஊழல் வெளியான காலகட்டத்தில் இது தொடர்புடையவர்களின் எண்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் என்று அனைவரின் தொலைபேசி தரவுகளையும் அந்தரங்க விவகாரங்களையும் ஓய்வே இல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒட்டுக் கேட்டு வந்தவர்கள் யார் என்ற விவரத்தை பெகாசஸ் நிறுவனம் வெளியிட மருத்துவருகிறது.

இந்நிலையில், இந்த பட்டியலில் பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மேற்கொண்ட தடயவியல் அறிக்கையைக் கொண்டு செய்திகள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதோடு, இதுகுறித்து இன்னும் வாய்திறக்காமல் மவுனியாக இருந்து வரும் பா.ஜ.க. தலைமை மீது அனைத்து தரப்பினருக்கும் கசப்புணர்வு ஏற்பட்டுவருவதை எந்த உளவு சாதனமும் இல்லாமல் நேரடியாகவே அறிந்து கொள்ள முடிகிறது.