திருவண்ணாமலை: ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று காலை விமரிசையாக கொடியேற்றதுடன் விழா தொடங்கியது.
பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவம் (Thiruvannamalai Temple Aani Bramorchavam) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (ஜூலை 8) அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக திருவிழா தொடங்கியது.
இந்த நிகழ்வின் போது தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை திருக்கோயிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. முதல் நாள் தொடங்கி பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 10ஆம் நாள் ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.