லகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோவிலாக இருந்து, பின்னர் புத்த மதக் கோவிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இந்தக் கோவில் இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113–1150) என்பவரால் 12-ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.

இக்கோவில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது மேலும் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோவிலையும் குறிக்கும். இக்கோவில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது.

இக்கோவிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோவில் முழுத்தோற்றம் பெற்றது. 1177-ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13-ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கோவில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோவில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது.

பெரும்பாலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவற்றில் மரக் கொம்புகள் செருகி தூக்கியோ இழுத்தோ உபயோகித்திருக்கிறார்கள். கற்களைச் சேர்க்க சாந்தோ, மண்ணோ பூசவில்லை. ஒன்றை ஒன்று தேய்த்தே நேர்த்தியாக இடைவெளி இல்லாமல் சேர்த்திருக்கிறார்கள். நவீன கருவிகள் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இவ்வாறெல்லாம் செய்தது விந்தை தான். கோவிலின் கூரைப்பகுதி, கோபுரப்பகுதியில் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உட்கூடு இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்கள் கோவிலை பழைய பாணி மாறாமல் சீரமைத்து இருக்கிறார்கள். வியட்நாம் போரையும் உள்நாட்டுப் போரையும் தாங்கி கோவில் நிமிர்ந்து நிற்கிறது. இப்பொழுதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இப்பிரமாண்டத்தைப் பார்க்க வருகிறார்கள்.