சென்னை:  கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதுதொடர்பான  அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அங்கன் வாடி ஊழியராக பணியாற்றிய தனது தாய் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில், வேலை வாய்ப்புக் கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.  மேலும்,  பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி விக்ரமின் மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து விக்ரம் தரப்பில்,   சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்,.  இந்த அரசாணை ரத்து செய்யபட்டுள்ளதாகவும் தனக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   விக்ரமிற்கு 8 வாரங்களில் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அதனை அமல்படுத்தாததால் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் நேரில் ஆஜராக ஆணையிட்டது.

இதையடுத்து வழக்கு ஏப்ரல் 1ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின்  சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் நேரில் ஆஜரான நிலையில், அரசாணையை ரத்து செய்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இன்னும் அமலில்தான் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, சமூக நலத்துறை செயலாளர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.