கன்னியாகுமரி: அங்கன்வாடி ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை பணியாளருக்கு ரூ. 10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரில் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஆன போதிலும் அங்கன்வாடி ஊழியர்கள் கலைந்து செல்லவில்லை. தாங்கள் போராட்டம் நடத்திய பகுதியில் இரவு படுத்து தூங்கினர்.

இன்று 3ம் நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்தது. கொளுத்தும் வெயிலில் குடைபிடித்தபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். அங்கன்வாடி ஊழியர் போராட்டத்தை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த பகுதியில் நேற்று இரவு 9.30 மணிக்கு ஹைமாஸ் விளக்கு அணைக்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் இருட்டில் தவித்தனர். இன்று அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.