மதுரை:
காயத்துடன் உயிருக்கு போராடிய நல்லப்பாம்புக்கு, மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி உள்ளனர். இந்த நெகிழ்ச்சியான செய்ல பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ரோடு முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று நகர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதை யாரோ தாக்கி காயம் ஏற்படுத்தி யிருந்த நிலையில், பாம்பு உயிருக்கு போராடுவதை கண்ட அந்தப் பகுதி மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ஊழியர்கள், பாம்பை லாவகமாக மீட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் பார்த்திபன் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்து, அதற்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
.சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையைம் தொடர்ந்து, அந்த பாம்புக்கு காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டு கட்டப்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த நல்லப்பாம்பு நன்றாக ஊர்ந்து செல்லத் தொடங்கியது. இதையடுத்து, அதன் உடல்நிலையை உறுதி செய்த மருத்துவர்கள், அதை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விட்டனர். காட்டைக் கண்டதும் பாம்பு விறுவிறுவென சென்று மறைந்து விட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்களின் மனித நேயத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.