விஜயவாடா: மாநிலத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை கட்டாயம் வழங்கியாக வேண்டுமென்பதை நாட்டிலேயே முதன்முதலாக சட்டமாக்கியுள்ளது ஆந்திரப் பிரதேசம்.
தொழிற்சாலைகள்/நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான ஆந்திரப் பிரதேச வேலை வாய்ப்பு சட்டம் 2019, அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கூட்டு ஒத்துழைப்பு நிறுவனங்கள், அரசு – தனியார் கூட்டுழைப்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் ஆகியவற்றில் 75% உள்ளூர் மக்களை கட்டாயம் பணியமர்த்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசிடமிருந்து நிதியுதவி உள்ளிட்ட வசதிகளைப் பெறுகிறதா? இல்லையா? என்ற பாகுபாடின்றி, இந்தச் சட்டம் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தொழிற்சாலை சட்டத்தில் முதல் வகைப்பாட்டில் வரும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தாது. அப்பட்டியலில், பெரும்பாலும், பெட்ரோலியம், மருந்து தயாரிப்பு துறை, நிலக்கரி, உரம் மற்றும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
ஒருவேளை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேவைப்படும் திறன்வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கவில்லை என்றால், அரசுடன் இணைந்து, அம்மக்களுக்கு திறன் பயற்சியளித்து, பின்னர் வேலைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த காரணத்தை வைத்து நிறுவனங்கள் தப்பித்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டாய இடஒதுக்கீட்டை வழங்கியாக வேண்டுமென்ற கோரிக்கை கர்நாடகா, மராட்டியம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தாலும், ஆந்திராவில் அது முதன்முதலாக சட்டமாகியுள்ளது.