சென்னை:
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலை யில், தெலுங்குதேசம் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.
175 தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தை ஆட்சி செய்து வந்த சந்திரபாபு நாயுடு கட்சி வெறும் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், பவன் கல்யானின் ஜனசேனா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எந்தவொரு தொகுதியையும் கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், குண்டூரில் நடைபெற்ற தெலுங்குதேசம் கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, “புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும். அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடுவோம்” என்றார்.
மேலும், “நமது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாம் மக்களுக்கு பணி ஆற்றுவோம். நாம் நமது தவறுகளை ஆராய்ந்து சரி செய்வோம். மக்கள் பணியில் நம்மை மறுஅர்ப்பணம் செய்வோம்” எனவும் குறிப்பிட்டார்.