அமராவதி:

மாநிலத்தின் வருமானத்தை பெருக்கும் நோக்கில், ஆந்திர மாநில மக்களையும் குடிகாரர்களாக மாற்றும் முயற்சி யில் ஈடுபட்டு உள்ளது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசு. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சிகளால், அரசே டாஸ்மாக் எனப்படும் மதுபானக் கடைகளை திறந்து, சிறுவயதினர் முதல் அனைத்து வயது மக்களையும் குடிகாரர்களாக மாற்றி வரும் நிலையில், தற்போது ஜெகன் அரசும் மதுபான கடைகளை இன்று திறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  175 தொகுதிகளில்,  151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார்.

ஜெகன் பதவி ஏற்றதும், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றார். ஆந்திராவில் தனியாரால் நடத்தப்பட்டு வரும் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் எனவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது, மாநில வருவாயை பெருக்கும் நோக்கில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிடப்பட்டு இன்று  (அக்டோபர் 1ம் தேதி)  மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள  4,377 மதுக்கடைகளில், 876 கடைகள் குறைக்கப்பட்டு, 3504 கடைகள்  இன்று முதல் மாநில அரசால் திறக்கப்படுகிறது. மேலும்  ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி ஆந்திர அரசு விதித்துள்ளது.

ஆந்திர அரசு நடத்தும் மதுபானக் கடைகள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கும் என்றும், ஒரு கடைக்கு 3 ஊழியர்கள் முதல் 4 ஊழியர்கள் வரை பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.