அமராவதி: ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில், அதை மாற்றி தற்போது அங்கு ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு அறிவித்து உள்ளது. மாநில தலைநகராக விசாகப்பட்டினத்தை ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதியில் உள்ள தாடேபள்ளியில் இருந்து தனது நிர்வாகத்தை விசாகப்பட்டினத்திற்கு அக்டோபர் 24 ஆம் தேதி (தசரா-விஜய தசமி) அன்று மாற்ற முடிவு செய்துள்ளார். அன்றைய தினத்தை ‘முஹூர்த்தம்’ என்று நிர்ணயித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கான என இரு மாநிலங்களாக பிரிந்தது. ஆந்திராவின் தலைநகராக அமராவதி செயல்படும் என .அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தெலுங்கானா மாநில தலைநகராக ஐதராபாத் தொடர்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, கடந்த தெலுங்குதேசம் ஆட்சியின்போது ஆந்திர மாநில தலைநகர அமராவதியை உலக நாடுகளுக்கு இணையாக பிரமாண்டமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். அதற்கான மாபெரும் கட்டிடங்கள் கட்டப்பட்டன.
ஆனால், அடுத்து வந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்த நிலையில், ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி அரசு, அமராவதி மாற்ற முடிவு செய்தது. அங்குள்ள பல கட்டிடங்கள் விதிகள் மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி இடித்து தள்ளியது. அதைத்தொடர்ந்து, மாநில தலைநகர் மாற்றப்படும் என கூறி வந்தது. இந்த நிலையில், தற்போது, மாநில தலைநகர் அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திரா தலைநகராக மாற்றப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அத்துடன் ஆந்திரா தலைநகராக விசாகப்பட்டினம் செயல்பாட்டுக்கு வரும் தேதியையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி, விஜயதசமி அன்று மாநில தலைநகர் விசாசகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முன்னதாக, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது. இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. அக்டோபர் 24-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது. இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இதை தற்போது ஜெகன் அரசு மாற்றி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.